கடைகளை அகற்றக் கோரிக்கை : ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

     ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் அமைத்துள்ள கடைகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக கடைகளை நகராட்சி நிர்வாகம் கட்டி கொடுத்தது. இதனால், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளான காரணத்தால், கடைகளை அகற்றக் கோரி பல கட்ட போராட்டங்களை இப்பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர்.

-நாகை மகாகிருஷ்ணன்

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் : ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்

       கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் இருந்து 664 படகுளில் சுமார் 2000 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர்.  கச்சத்தீவு கடல் பகுதி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். பிளாஸ்டிக் பைப்களை கொண்டு மீனவர்களை தாக்கியதாகவும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாகவும், மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை மீண்டும் கடலில் வீசி எரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 -பசுமை நாயகன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படாத சுகாதார நிலையங்களால் மக்கள் அவதி

     ராமநாதபுரம் மாவட்டத்தில் முன் அறிவிப்பின்றி மூடப்பட்ட துணை சுகாதார நிலையங்களால் மக்கள் சிகிச்சைக்காக 10 முதல் 50 கிலோமீட்டர் வரை பயணம் செய்யும் அவலம் நிலவுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது மாதவனூர், பொட்டகவயல், காரணமங்கலம்  கிராமங்களில் வசிக்கும் மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக பொட்டகவயலில் உள்ள ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில்,  இந்த சுகாதார நிலையம் சில ஆண்டுகளாக பூட்டியே கிடப்பதாகவும், செவிலியர்கள் யாரும் பணிக்கே வருவதில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.
சுகாதார நிலையங்கள் தொடர்ந்து செயல்படாமல் இருப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிகிச்சைக்காக பொதுமக்கள் படும் அவலங்களை கருத்தில் கொண்டு, மூடப்பட்ட சுகாதார நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-இணைய செய்தியாளர் - வெங்கடேஸ்

தேவர் குருபூஜை பசும்பொன்னில் பலத்தப் பாதுகாப்பு

   தேவர் குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
இதனையடுத்து, மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.  ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவர் குருபூஜையை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு, மதிமுக பொதுச்செயலாளர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, நேதாஜி சுபாஷின் வலது கரமாக விளங்கிய முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு கடந்த 37 ஆண்டுகளாக சிறையில் இருந்த காலம் தவிர்த்து தாம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருவதாகவும் வைகோ கூறினார்
-இணைய செய்தியாளர்-M.சின்னதுரை

புற்றுநோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் கிராம மக்கள்

      ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஏராளமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் இருந்து 15 நிமிட பயணத் தூரத்தில் உடையநாதபுரம் என்ற கிராமம் உள்ளது. சுமார் 2 ஆயிரம் மக்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில் புற்றுநோயின் தாக்குதல் அதிக அளவில் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. புற்றுநோய் காரணமாக, பலர் இளம் வயதிலேயே அனாதைகளாகி விட்டதாக இந்தக் கிராம மக்கள் கூறுகிறார்கள் .
     வறட்சியால் பாதிக்கப்பட்ட இந்தக் கிராமத்தில், பெரிய அளவில் வேலை வாய்ப்புகளோ, தொழில் வாய்ப்புகளோ கிடையாது. போதிய விழிப்புணர்வும் மருத்துவ வசதிகளும் இல்லாததால், புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறியவும் இவர்களால் முடியவில்லை.
      இந்தக் கிராமம் குறித்து சுகாதாரத் துறையினரிடம் கேட்டபோது, வாழ்க்கை முறைகளும், சுத்தமின்மையுமே கிராம மக்களுக்கு புற்றுநோய் வருவதற்குக் காரணம் என்று தெரிவித்தனர். எனினும் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு புற்றுநோய் தாக்கியிருப்பதாகக் கூறப்படும் தகவலை அவர்கள் உறுதிசெய்யவில்லை.             
இந்தக் கிராமம் தொடர்பாக புதிய தலைமுறை தெரிவித்த தகவலையடுத்து, ஒரு குழு அமைத்து இங்குள்ள கிராமப் பகுதிகளில் சோதனை நடத்த இருப்பதாக மாவட்ட சுகாதாரத் துணை இயக்குநர் பாலச்சந்திரன் உறுதியளித்துள்ளார்.
                                                                                                                                                                                                                                          -இணைய செய்தியாளர்-வெங்கடேஸ்

ராமநாதபுரம் அருகே 6 பேர் எரித்துக் கொலை


   ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோப்புவலசை என்ற கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்தம்மாள், அவரது தந்தை, 2 பெண் மற்றும் 2 ஆண் குழுந்தைகள் தங்களது கூரை வீட்டில் நேற்றிரவு துங்கிக் கொண்டிருந்தனர்.
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள காளிமுத்தம்மாளின் குடிசை வீடு, இன்று காலை சாம்பலாகி கிடந்ததை அவ்வழியே சென்றவர்கள் பார்த்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் நேரில்வந்து பார்வையிட்டபோது, காளிமுத்தம்மாள் உள்ளிட்ட 6 பேரும் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்தனர். அதேநேரத்தில் வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் உயிரிழந்த 6 பேரும் எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் உச்சிப்புளி காவல்துறையினர், நிலத்தகராறு காரணமாக 6 பேரும் எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலும் விசாரித்து வருகின்றனர். வீட்டோடு சேர்த்து எரித்துக்கொல்லப்பட்ட காளிமுத்தம்மாளின் கணவர் கள்ளழகர் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.                         -  இணைய செய்தியாளர் - வெங்டேஸ்          

இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்

       ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு, பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதையொட்டி பல்வேறு விதிமுறைகளை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி, காலை 7 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. அஞ்சலி செலுத்த வரும் தலைவர்களுக்கு தனித்தனியே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பரமக்குடி செல்லும் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அஞ்சலி செலுத்த வருபவர்கள், குறிப்பிட்ட வழித்தடங்களில் தான் வரவேண்டும் என்றும், வாகனங்களில் மேல் பகுதியில் அமர்ந்து வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகனங்களில் ஒலிப்பெருக்கி வைக்கக் கூடாது எனவும், ஆயுதங்கள் எதுவும் எடுத்துவரக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மானுவேல் சேகரனின் நினைவு தினப் பாதுகாப்புப் பணிக்காக 3 ஆயிரம் காவல்துறையினர் பரமக்குடியில் குவிக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கடைகள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-தேனி ராஜா