ராமநாதபுரம் அருகே 6 பேர் எரித்துக் கொலை


   ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோப்புவலசை என்ற கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்தம்மாள், அவரது தந்தை, 2 பெண் மற்றும் 2 ஆண் குழுந்தைகள் தங்களது கூரை வீட்டில் நேற்றிரவு துங்கிக் கொண்டிருந்தனர்.
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள காளிமுத்தம்மாளின் குடிசை வீடு, இன்று காலை சாம்பலாகி கிடந்ததை அவ்வழியே சென்றவர்கள் பார்த்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் நேரில்வந்து பார்வையிட்டபோது, காளிமுத்தம்மாள் உள்ளிட்ட 6 பேரும் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்தனர். அதேநேரத்தில் வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் உயிரிழந்த 6 பேரும் எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் உச்சிப்புளி காவல்துறையினர், நிலத்தகராறு காரணமாக 6 பேரும் எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலும் விசாரித்து வருகின்றனர். வீட்டோடு சேர்த்து எரித்துக்கொல்லப்பட்ட காளிமுத்தம்மாளின் கணவர் கள்ளழகர் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.                         -  இணைய செய்தியாளர் - வெங்டேஸ்