ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படாத சுகாதார நிலையங்களால் மக்கள் அவதி

     ராமநாதபுரம் மாவட்டத்தில் முன் அறிவிப்பின்றி மூடப்பட்ட துணை சுகாதார நிலையங்களால் மக்கள் சிகிச்சைக்காக 10 முதல் 50 கிலோமீட்டர் வரை பயணம் செய்யும் அவலம் நிலவுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது மாதவனூர், பொட்டகவயல், காரணமங்கலம்  கிராமங்களில் வசிக்கும் மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக பொட்டகவயலில் உள்ள ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில்,  இந்த சுகாதார நிலையம் சில ஆண்டுகளாக பூட்டியே கிடப்பதாகவும், செவிலியர்கள் யாரும் பணிக்கே வருவதில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.
சுகாதார நிலையங்கள் தொடர்ந்து செயல்படாமல் இருப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிகிச்சைக்காக பொதுமக்கள் படும் அவலங்களை கருத்தில் கொண்டு, மூடப்பட்ட சுகாதார நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-இணைய செய்தியாளர் - வெங்கடேஸ்