ராமேஸ்வரம் பாம்பன் பாலம் அருகே தரைத் தட்டிய கப்பல் மீட்பு


      ராமேஸ்வரம் பாம்பன் பாலம் அருகே கடந்த 4 நாட்களாக தரைத் தட்டி நின்ற கப்பற்படைக்கு சொந்தமான எண்ணெய்க் கப்பல் மீட்கப்பட்டது. அதேசமயம் நூற்றாண்டு பழமையான ரயில் பாலத்தின் மீது கப்பல் மோதியதால் தூண் சேதமடைந்து ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
   கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு செல்லும் வழியில் கடந்த 9-ம் தேதி ராமேஸ்வரம் வந்த இந்திய கப்பற் படைக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் தரை தட்டி நின்றது. பாம்பன் பாலம் அருகே நின்ற இக்கப்பலின் நங்கூரம் பிடி தளர்ந்து, நகர்ந்து இன்று அதிகாலை ரயில் பாலத்தின் மீது மோதியது. இதன் காரணமாக ரயில் பாலத்தின் தூண் ஒன்று பலத்த சேதமடைந்தது. இதனையடுத்து கப்பலை மீட்கும் முயற்சிகள் இன்று தீவிரப்படுத்தப்பட்டன. இதற்காக 6 விசைப்படகுகள் ஈடுபடுத்தப்பட்டன. நீண்ட முயற்சிக்கு பிறகு பகல் 1.30 மணியளவில் அந்தக் கப்பல் மீட்கப்பட்டது.
   ரயில் பாலம் சேதம் காரணமாக, ராமேஸ்வரத்திற்கான ரயில் சேவை தடைப்பட்டுள்ளது. ரயில் பாலத்தில் சேதமடைந்த தூணை சீரமைக்க இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேதமடைந்த பகுதியை பார்வையிட்ட மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோஜி, சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று கூறியுள்ளார்.
  ராமேஸ்வரத்திற்கு ஒரு வார காலத்திற்கு ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா வந்த பயணிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே, பாலம் அருகே தரைத் தட்டிய மற்றொரு இழுவைக் கப்பலை மீட்கும் பணி, குறைவான நீரோட்டம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
  இன்னும் ஒரு வாரத்திற்கு ரயில்கள் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட உள்ளன. அதேபோல் புறப்படும் ரயில்களும் மண்டபத்தில் இருந்து புறப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. மண்டபத்திற்கு ரயில் வரும் நேரத்தில் அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
                                                             .-பசுமை நாயகன்