இப்படியும் ஒரு தலைவர்...விளக்கனேந்தல்- ராமையா.


பசுமை நாயகன் www.thagavalthalam


       முதுகுளத்தூர் அருகே விளக்கனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் ராமையா . இவர் 2006 ல் போட்டி இன்றி தேர்ந்தெடுக்க பட்டார். 

2011 ல் போட்டி இருந்தாலும் மக்கள் மீண்டும் இவரையே தேர்ந்தெடுத்தார்கள்

பல ஆண்டுகளுக்கு முன்னால் அரசு கொடுத்த இலவச வீட்டில் வசித்தார். அதுவும் பழுதடைந்து விட்டாதால் இந்த குடிசையை அமைத்து இதில் மனைவி குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார்.

100 நாள் வேலையை நம்பியே உள்ளது குடும்பம். இவர் மனைவி 100 நாள் வேலைக்கு சென்று வருகிறார் இது தான் குடும்ப வருமானம். வாகனம் எதுவும் இல்லை. நடந்தே தான் செல்கிறார் மக்கள் பணிக்காக..

உட்கார சேர்கூட இல்லை. என்ன ஆச்சரியமாக இருக்கா ? உண்மை . மனசாட்சி உள்ள அரசியல் வாதிகளே உங்கள் மனசாட்சி உறுத்துகிறதா ? 
எப்படி உறுத்தும் ? மனசாட்சி இருந்தால் தானே ?


                                                                                       -பசுமை நாயகன்.


ராமேஸ்வரம் பாம்பன் பாலம் அருகே தரைத் தட்டிய கப்பல் மீட்பு


      ராமேஸ்வரம் பாம்பன் பாலம் அருகே கடந்த 4 நாட்களாக தரைத் தட்டி நின்ற கப்பற்படைக்கு சொந்தமான எண்ணெய்க் கப்பல் மீட்கப்பட்டது. அதேசமயம் நூற்றாண்டு பழமையான ரயில் பாலத்தின் மீது கப்பல் மோதியதால் தூண் சேதமடைந்து ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
   கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு செல்லும் வழியில் கடந்த 9-ம் தேதி ராமேஸ்வரம் வந்த இந்திய கப்பற் படைக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் தரை தட்டி நின்றது. பாம்பன் பாலம் அருகே நின்ற இக்கப்பலின் நங்கூரம் பிடி தளர்ந்து, நகர்ந்து இன்று அதிகாலை ரயில் பாலத்தின் மீது மோதியது. இதன் காரணமாக ரயில் பாலத்தின் தூண் ஒன்று பலத்த சேதமடைந்தது. இதனையடுத்து கப்பலை மீட்கும் முயற்சிகள் இன்று தீவிரப்படுத்தப்பட்டன. இதற்காக 6 விசைப்படகுகள் ஈடுபடுத்தப்பட்டன. நீண்ட முயற்சிக்கு பிறகு பகல் 1.30 மணியளவில் அந்தக் கப்பல் மீட்கப்பட்டது.
   ரயில் பாலம் சேதம் காரணமாக, ராமேஸ்வரத்திற்கான ரயில் சேவை தடைப்பட்டுள்ளது. ரயில் பாலத்தில் சேதமடைந்த தூணை சீரமைக்க இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேதமடைந்த பகுதியை பார்வையிட்ட மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோஜி, சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று கூறியுள்ளார்.
  ராமேஸ்வரத்திற்கு ஒரு வார காலத்திற்கு ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா வந்த பயணிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே, பாலம் அருகே தரைத் தட்டிய மற்றொரு இழுவைக் கப்பலை மீட்கும் பணி, குறைவான நீரோட்டம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
  இன்னும் ஒரு வாரத்திற்கு ரயில்கள் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட உள்ளன. அதேபோல் புறப்படும் ரயில்களும் மண்டபத்தில் இருந்து புறப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. மண்டபத்திற்கு ரயில் வரும் நேரத்தில் அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
                                                             .-பசுமை நாயகன்

பரமக்குடியில் தி.மு.க கோஷ்டி மோதல்


   ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தி.மு.க.வின் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கார், தங்கும் விடுதி, உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன.
தி.மு.க. மாவட்டச் செயலாளரும் ஆர்.எஸ். மங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான சுப. தங்க வேலன் கோஷ்டிக்கும், ராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் ஜெ.கே.ரித்தீஷ் கோஷ்டிக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி தி.மு.க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி நடைபெற்றது. இதில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இதனிடையே, சுப. தங்க வேலன் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
                              -நாகை மகாகிருஷ்ணன்

கடல் சீற்றம் காரணமாக ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லத்தடை

                    மோசமான வானிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. பலத்த சூறைக்காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
இதையடுத்து, மீனவர்களை கடலுக்கு அனுமதிக்க வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியது. இதனால் மண்டபம், ராமேஸ்வரம் துறைமுகங்களில், மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை.
கடலுக்கு மீன்பிடிப்பற்காக வந்த, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதேபோல், கடல்சீற்றம் காரணமாக, தூத்துக்குடியில் 250 க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள், பாதியிலேயே கரை திரும்பினர்.
-நாகை மகாகிருஷ்ணன்

பரமக்குடியில் சூரியசக்தி மின்னுற்பத்தி முதல்வர் ஒப்பந்தம்

      ராமநாதபுரம் பரமக்குடியில் சூரியமின்சக்தி பூங்காவை அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கும் ராசி கிரீன் எர்த் எனர்ஜி நிறுவனத்துக்கும் இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி பரமக்குடியில் அமைய உள்ள சூரிய மின்சக்தி பூங்காவில், 100 மெகாவாட் மின்னுற்பத்தி நடக்கும். 500 ஏக்கர் பரப்பளவில், ரூ.920 கோடி முதலீட்டில், இந்த பூங்கா அமைக்கப்படும். ஓராண்டில் மின்னுற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்தில், 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர். அரசு மற்றும் தனியார் கூட்டுடன் இந்தியாவில் அமையும் முதல் சூரிய ஒளிமின்சக்தி பூங்கா இது.
மேலும் கடந்த மாதம் சூரிய மின்சக்தி கொள்கையை வெளியிட்ட பின்னர் தமிழக அரசு எடுத்துள்ள முதல் நடவடிக்கையாகவும் இது அமைகிறது. இது தொடர்பாக சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் தொழிற்வளர்ச்சி நிறுவன நிர்வாக இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மாவும், ராசி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் தலைவர் நரசிம்மனும் தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதேபோன்று தனியார் - அரசு கூட்டுடன், மேலும் பல சூரிய ஒளிமின்சக்தி உற்பத்தி நிறுவனங்கள் தமிழகத்தில் அமையும் என்றும் தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது
-பசுமை நாயகன்